சென்னை: ஆசிரியர்களின் பணிநிலைத்தன்மை மற்றும் பதவி உயர்வு தொடர்பாக உருவாகியுள்ள பெரும் சிக்கலை தீர்க்க, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE Act) மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆசிரியராக பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பு காரணமாக, 2011-க்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் பணியில் தொடர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த தீர்ப்பால் மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே ஜனவரி 24, 25 தேதிகளில் நடத்தப்படவிருந்த சிறப்பு TET தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, சில மணி நேரங்களிலேயே அதை இணையதளத்தில் இருந்து நீக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் சிறப்பு TET தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த நிலைமையில், பல ஆண்டுகளாக பணியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் TET கட்டாய விதிமுறையால் கடுமையாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது கடிதத்தில் முக்கிய அம்சங்களை முன்வைத்துள்ளார்.
அதில், RTE சட்டம் பிரிவு 23, தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் (NCTE) பிரிவு 12-A ஆகியவற்றில் திருத்தம் செய்து, ஆசிரியர்களை பாதுகாப்பதுடன் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாமல் வைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
“TET-யை பின்நாள் அமல்படுத்துவது (retrospective effect) முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அநீதி செய்வதோடு, பெரும் நிர்வாக சிக்கலும் உருவாக்குகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்” என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்னிறுத்திய அவர், அவர்களின் பணிநிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் RTE சட்டத்தில் அவசரமாக சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
