திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலைப் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், கல்லாத் தூரிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லும் போது, முன்னூரான் காடுவெட்டி பகுதியில் உள்ள பஸ் நிலையம் அருகே மர நிழலில் நின்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த ஆறு இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடன் சிவக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்பு ராட்கள் மற்றும் கட்டைகள் கொண்டு, அவரை சாலையிலேயே விரட்டி தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
தன்னை காப்பாற்றிக் கொள்ள சிவக்குமார் அருகில் வந்த அரசு பஸ்சில் ஏற முயற்சிக்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோவை அண்ணாமலை வெளியிட்டு, “இது தான் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு நிலை. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி” என கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார்.