அரசுப் பள்ளிகளில் நம்பிக்கை குறைவு : திமுக அரசை குற்றம்சாட்டும் அண்ணாமலை

அரசுப் பள்ளிகளில் நம்பிக்கை இழந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2023–2024 கல்வியாண்டில் 42.23% இருந்த அரசுப் பள்ளி சேர்க்கை விகிதம், 2024–2025 கல்வியாண்டில் 39.17% ஆகவும், 2025–2026 நடப்பு கல்வியாண்டில் 37.92% ஆகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் 2.39 லட்சமாக இருந்தாலும், 12,929 தனியார் பள்ளிகளில் 5.26 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது, தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளை விட இரண்டு மடங்கிற்கும் அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

பல இடங்களில் அரசுப் பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுவது, போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது, மாணவர்கள் இடையே சாதி சார்ந்த வன்முறை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. இதனால் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்து தனியார் பள்ளிகளையே தேர்வு செய்கின்றனர்,” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று நடைபெறாமல் போயுள்ளது. ஒருபுறம் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல மொழிகள் கற்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிற நிலையில், ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அந்த வாய்ப்பிலிருந்து விலக்கப்படுகின்றனர். கல்விக்கான காமராஜரின் கனவு, திமுக அரசின் அலட்சியத்தால் பாழ்பட்ட நிலையில் உள்ளது. தரமான கல்வி வேண்டுமென எளிய குடும்பங்கள்கூட கடன் வாங்கி தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றன,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “வெற்று விளம்பரங்கள் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு, கல்வித்துறையையும் பலியிட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரியது,” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Exit mobile version