சென்னை: நாகாலாந்து மாநில ஆளுநரும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான இல. கணேசன், அரசு மரியாதையுடன் இன்று சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த மாதம் தங்கி இருந்தபோது, நீரிழிவு பாதிப்பால் அவர் கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கழிவறையில் தவறி விழுந்ததில் பின்னந்தலையில் அடிபட்டதால், பின்னர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் எட்டு நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், நேற்று மாலை 6.23 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது உடல் தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச். ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இன்று மாலை பெசன்ட்நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மூன்று முறை 42 குண்டுகள் முழக்கத்தில் முப்படை வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இல. கணேசன், திருமணம் செய்யாமல் சமூகப் பணியில் ஈடுபட்டவர். 1970ஆம் ஆண்டு வருவாய் ஆய்வாளர் பணியைத் துறந்து, ஆர்எஸ்.எஸ். அமைப்பில் முழுநேர பிரச்சாரகராக பணியாற்றினார். பின்னர் பாஜகவின் ஒரே நாடு பத்திரிகையின் ஆசிரியராகவும், “பொற்றாமரை” என்ற இலக்கிய அமைப்பை நடத்தியவராகவும் இருந்தார்.
1991ல் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும், 2006–2009 வரை மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார். தேசியச் செயலாளர் மற்றும் தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016ல் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, 2021ல் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேற்கு வங்கம் மற்றும் 2023 முதல் நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பு வகித்தார்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக சித்தாந்தங்களை உறுதியாக பின்பற்றியிருந்தாலும், திராவிட இயக்கத் தலைவர்களுடன் நல்லுறவை பேணிய இல. கணேசன், தமிழ் இலக்கிய ஆர்வத்தால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமாக பழகியவராக இருந்தார்.