மயிலாடுதுறையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கண்கொடுத்த விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம்; தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜர் சாலையில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கண்கொடுத்த விநாயகர் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 19-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, பூரணாஹூதி செய்விக்கப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து வேத மந்திரங்கள் ஓத சிவ கயிலாய வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
