திண்டுக்கல் – பழனி சாலையில் முக்கிய மையமாகத் திகழும் ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொத்தப்புள்ளி ஊராட்சிப் பகுதிகள், தற்போது கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும், அடிப்படை வசதிகள் இன்றியும் சிதைந்து வருகின்றன. ஊராட்சி ஒன்றியம், காவல் நிலையம், வங்கிகள் எனத் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்தப் பகுதியில், தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களின் அத்துமீறல்களால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கொத்தப்புள்ளி, தாதன்கோட்டை, பொம்மனங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பெரும்பாலான கிரஷர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. இதனால் எழும் அடர் புகையும் கல் தூசியும் அப்பகுதி முழுவதையும் சூழ்ந்துள்ளதால், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மூச்சுத் திணறல், இதய நோய் மற்றும் காது கேளாமை போன்ற தீவிர சுவாச மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கிரஷர் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, இப்பகுதிகளில் நிலவும் கட்டமைப்புச் சீர்கேடுகள் பொதுமக்களை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளன. பெருமாள் கோயில் வேலம்பட்டி, அழகுபட்டி, தாதங்கோட்டை, பொம்மனங்கோட்டை உள்ளிட்ட கிராமப்புறச் சாலைகள் கடந்த பத்து ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மரணக் குழிகளாகக் காட்சியளிக்கின்றன. எல்லப்பட்டி, கதிரனம்பட்டி சாலைப் பாலங்கள் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதால் தொடர் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. “அரசு விதிகளுக்குப் புறம்பாக அதிகத் திறன் கொண்ட வெடிகளைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகர்ப்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுச் சேதமடைகின்றன; மனிதர்கள் வாழத் தகுதியற்ற சூழலாக இப்பகுதி மாறி வருகிறது” என்று விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் தயாளன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், போதிய நிலத்தடி நீர் இருந்தும் விநியோகக் குளறுபடிகளால் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதுடன், முறையான சாக்கடை வசதிகள் இல்லாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, ரெட்டியார்சத்திரம் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பதும், நீக்கப்பட்ட ரெட்டியார்சத்திரம் இரயில்வே நிலைய நிறுத்தத்தை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அரசு கலைக்கல்லூரி அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அடிப்படைத் தேவைகளான சாலை, குடிநீர் மற்றும் காற்று மாசற்ற சூழலை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
