சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே கூமாப்பட்டி என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் dark_night_tn84 என்ற கணக்கில் கூமாபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், கூமாப்பட்டி கிராமத்தின் அருமை பெருமைகளை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதில், கூமாபட்டிக்கு வாங்க, கூமாபட்டி தனி தீவு, கூமாபட்டி தண்ணீர் சர்பத் மாதிரி இருக்கும், மூலிகை தண்ணீர் இது என அவர் பேசிய வீடியோக்களே #Koomapatti என ட்ரெண்ட்டிற்கு காரணமாகும்.
அந்த வீடியோவில் உள்ள பச்சை பசேலான விவசாய நிலங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றை பார்த்த இணையவாசிகள், உண்மையிலே தமிழ்நாட்டில் கூமாப்பட்டி என தீவு உள்ளதா என அதை காணும் ஆர்வத்துடன், Vloggers கூமாப்பட்டி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கூமாப்பட்டி என்பது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பிளவக்கல் அணை அருகே கூமாப்பட்டி அமைந்துள்ளது.
ஆனால், வீடியோவில் கட்டப்படுவது போல், அங்குள்ள நீர்நிலைகளில் தற்போது நீர்வரத்து இல்லை, அது பழைய வீடியோ என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.