திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி, கடந்த இரண்டு நாட்களாக டிட்வா புயல் மற்றும் மிதமான மழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றுலா தளங்களில் பில்லர் ராக், குணா குகை, பைன் மர சோலை, மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற பகுதிகள் அடங்கும், இதில் அதிகமான மரங்கள் இருப்பதால், வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடங்களை மூடியது.
இந்நிலையில், நேற்று மாலை மழை குறைந்து, இயல்பு நிலை திரும்பியதால், வனத்துறை இன்று முதல் சுற்றுலா தளங்களை மீண்டும் திறக்க அறிவித்துள்ளது. சுற்றுலா தளங்களுக்குள் மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தும் முறைகளை பின்பற்றவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனால், கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் மீண்டும் இயற்கை அதிசயங்களைக் காணும் வாய்ப்பு பெற்றுள்ளனர், ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என வனத்துறை வலியுறுத்தியுள்ளது.
