தமிழகத்தில் கிட்னி திருட்டு மற்றும் மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்தோரின் உறுப்புகள், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, உயிருடன் இருப்பவர்கள் ரத்த உறவுகளுக்குள் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளிக்கலாம். ஆனால் ரத்த உறவுகள் அல்லாதவர்கள் உறுப்பு தானம் செய்வது சட்டவிரோதமாகும்.
இந்த நிலையில், ஏழ்மை நிலையில் உள்ளவர்களை ஏமாற்றி, இடைத்தரகர்கள் சில லட்சம் ரூபாய்க்கு கிட்னி அல்லது கல்லீரல் பகுதியைப் பெற்று, பல மடங்கு விலையில் விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள், “மனித உறுப்புகள் திருட்டு மற்றும் விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
