: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் கரத்தை வலுப்படுத்தும் விதமாகப் பல்வேறு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) முக்கிய நிர்வாகிகள் 9 பேர், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அமமுகவிற்குப் பெரும் பலமாக விளங்கிய மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும், பெரம்பலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.பி. மருதராஜா தலைமையில் இந்த நிர்வாகிகள் எடப்பாடியாரைச் சந்தித்தனர்.
அதிமுகவில் இணைந்தவர்களில் அமமுக வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் தழுதாழை சேகர், வேப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் கண்ணுசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பழனிவேலு ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் அசோகன், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மகேந்திரன், மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர்கள் நல்லநாயகம், முத்தையா ஆகியோரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்றார்.
இந்த இணைப்பு விழாவின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிச்சமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ராஜாராம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தன் மற்றும் இலக்கிய அணித் தலைவர் நெய்குப்பை துரை உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், ஆர்.பி. மருதராஜாவின் தீவிர முயற்சியால் இந்த இணைப்புச் சாத்தியமாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் கொத்தாக வெளியேறி அதிமுகவில் இணைந்திருப்பது, அந்த மாவட்டத்தில் அமமுகவிற்குப் பெரும் பின்னடைவாகவும், அதிமுகவிற்குப் புதிய உத்வேகமாகவும் பார்க்கப்படுகிறது.














