கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர்மீது கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் “விஜய் கைது செய்யப்படுவாரா?” என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது :
“விஜய்யின் பெயர் எஃப்.ஐ.ஆர்-ல் இடம்பெறவில்லை. அப்படியிருக்கையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோருவது பொருத்தமற்றது. சம்பவத்துடன் விஜய்க்கு தொடர்பு உள்ளது என்று அரசு கருதினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்போது அத்தகைய நிலைமை இல்லை. சிலர் அரசியல் நோக்கத்திற்காக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்” என்றார்.
இதேவேளை, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டதாக 25 சமூக வலைதள கணக்குகளுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
















