கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்றைய இரவே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டோரைக் காண தவெக தலைவர் விஜய் இன்னும் நேரில் செல்லாதது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். அந்த உரையாடலின் போது, “விரைவில் நேரில் வந்து உங்களை சந்திப்பேன்; இந்த துயர நேரத்தில் நீங்கள் மட்டும் அல்ல, நானும் உங்களுடன் இருக்கிறேன்” என்று விஜய் உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை மூலம், பாதிக்கப்பட்ட மக்களுடன் நெருக்கமாக விஜய் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.