கரூர் கூட்ட நெரிசல் | “ஸ்டாலின் அரசு சீர்குலைந்துவிட்டது” – இபிஎஸ் விமர்சனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கான காரணங்களை வெளிச்சமிட்டு காட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா, காவல் துறை டிஜிபி வெங்கட்ராமன், உள்துறை செயலாளர் திரஜ் குமார், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“விசாரணையை பாதிக்கும் செயல்”

எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட இபிஎஸ், “ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அரசு அதிகாரிகள் ஊடகங்களில் விளக்கம் அளிப்பது, நீதிமுறை விசாரணையை பாதிக்கும் செயலாகும்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

“அரசு நாடகமாடுகிறது”

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கவும், உண்மையை மறைக்கவும் அரசு நாடகமாடுவதாக பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Exit mobile version