கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார். அந்த மனுவில், பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தப்படும் போது வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
விசாரணை நடைபெறும் போது, நீதிபதி செந்தில்குமார் கூறியதாவது:
“சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்கக்கூடாது. இது என்ன மாதிரியான கட்சி? தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறிவிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவெகாவுக்கு என்ன பிரச்னை?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், விசாரணையின் போது சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவும் நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. அதுகுறித்து நீதிபதி,
“அவர் புரட்சி ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்துள்ளார். இதற்குப் பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனமாக பார்த்து உடனடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஒரு சிறிய வார்த்தை கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நீங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா?” எனக் கடுமையாக எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதவ் அர்ஜூனா மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தகவல் அளித்தார்.
