கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அரசியல் துறையில் முக்கிய ஆலோசனைகளை வழங்குபவராக கருதப்படும் ஒரு “சாணக்கியரை” நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் கடந்த இரண்டு நாட்களாக நீலாங்கரை இல்லத்தில் தனிமைப்படைந்து இருந்த நிலையில், இன்று காலை பட்டினப்பாக்கம் இல்லத்திற்குச் சென்றார். பிற்பகலில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கும் விஜய் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கே அவர் கட்சியின் சட்ட, அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.
கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது சதி நடந்திருக்கிறது என்றும் கட்சி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தசரா விடுமுறை அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் தலைமையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையில், வழக்கு தொடர்பான சட்ட ரீதியிலான ஆலோசனைகளையும், அரசியல் ரீதியிலான சவால்களை சமாளிக்கவும், அனுபவமிக்க அரசியல் ஆலோசகரிடம் விஜய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.