புதுடில்லி: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியது.
கரூரில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, ஐகோர்ட் உத்தரவுப்படி ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக தவெக சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்தது.
சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி அமைத்த விசாரணைக் குழுவுக்காக மனு தாக்கல் செய்யப்பட்ட தவெக மனு, பிற மனுக்களுடன் சேர்த்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி. வில்சன், ரவீந்திரன் ஆஜராக உள்ளனர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி மற்றும் கோபால் சங்கர் நாராயணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
தவெக வாதப்படி, “போலீசார் அறிவுறுத்தலின் படியே கூட்டநெரிசல் இடத்தை விஜய் விட்டு சென்றார். அவர் இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகி இருக்குமென போலீசார் தெரிவித்துள்ளனர். அரசு தரப்பின் ‘விஜய் தப்பி ஓடினார்’ என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது” என்று கூறப்பட்டது.