கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மற்றும் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து, அவர் தரப்பு “முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற விரும்புகிறோம்” என நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு இதனை ஏற்றுக்கொண்டு, மனுவை தள்ளுபடி செய்தது.
இதேவேளை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், இருவரும் அக்டோபர் 29-ஆம் தேதி கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை மூலம் கூட்ட நெரிசலுக்கான காரணங்கள் மற்றும் நிகழ்ச்சியின் பொறுப்புகள் குறித்து சிபிஐ தீவிரமாக விசாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
			
















