திமுக கூட்டணி உடையும் என கவலைப்பட வேண்டாம் ; உங்கள் கட்சி உடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – கனிமொழி எம்.பி., எடப்பாடிக்கு சவால்

திமுக கூட்டணி உடையும் என எதிர்பார்த்து பேசிக்கொண்டிருப்பதை விட, தங்களது கட்சி உடையாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
“திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சிலர் கூறுகிறார்கள். ஆனால் முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன் ஆட்சிக்காலத்தில் எத்தனை முதலீடுகளை ஈர்த்தார் என்பதை முதலில் ஒரு அறிக்கையாக வெளியிட வேண்டும். குறைந்தது இரண்டு நிறுவனங்களையேனும் சொல்லி காட்டட்டும்,” என சவால் விட்டார்.

அவர் மேலும் கூறியதாவது :
“நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தவர், தேர்தல் நெருங்கியதும் மக்களைப் பார்க்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மக்களே அவரை மறந்துவிட்டார்கள்; அவருடைய சொந்தக் கட்சியினரும் மறந்துவிட்டார்கள். அதனால் அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூட்டணியிலேயே இருந்து, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்சனைகளில் எக்குரலும் கொடுக்கவில்லை. திமுக கூட்டணி உடையும் எனக் கவலைப்பட வேண்டாம்; உங்கள் கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,” எனக் கனிமொழி எம்.பி. சவால் விட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் மணிப்பூர் பயணம் குறித்தும் அவர் விமர்சித்தார்.
“இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் எரிந்து கொண்டிருந்தது. இப்போது தான் பிரதமர் அங்கு செல்ல முடிவு செய்துள்ளார். அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதற்கே மனிதாபிமானம் தோல்வியடைந்துவிட்டது. 2027 மணிப்பூர் தேர்தல் கணக்கில் வைத்தே அவர் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்,” எனக் கனிமொழி குற்றம்சாட்டினார்.

Exit mobile version