“தனிப்பட்ட போட்டோ, வீடியோவை வெளியிடுவதாக ஜாய் மிரட்டினார்” – மாதம்பட்டி ரங்கராஜ்!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறிய திருமண குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். மேலும், கருவுற்ற நிலையில் ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும், அவரின் வற்புறுத்தலால் பலமுறை கருக்கலைப்பும் செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஜாய் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு முறை விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவின் பேரில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, “மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடன் காதலில் இருந்ததையும், திருமணம் செய்து கொண்டதையும், குழந்தை தன்னுடையது என்பதையும் ஒப்புக்கொண்டார்” என ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருந்தார்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், அந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மகளிர் ஆணையத்தில் நான் எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை. ஜாய் மிரட்டலின் பேரில் இந்த திருமணம் நடந்தது. தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக அவர் பலமுறை மிரட்டினார்,” என கூறியுள்ளார்.

“2025 செப்டம்பரில் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நான் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளேன். இந்த திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடந்தது. ஜாய் மாதம் ரூ.1.50 லட்சம் பராமரிப்பு தொகை, மேலும் தனது BMW காருக்கான ரூ.1.25 லட்சம் EMI என கோரியதை நான் மறுத்துவிட்டேன். நான் டிஎன்ஏ பரிசோதனையை மறுக்கவில்லை; குழந்தை என்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் கவனிப்பேன் என்றும் கூறியுள்ளேன்,” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், மகளிர் ஆணையம் வெளியிட்ட பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகவும், உண்மையை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version