பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பராமரிப்பு தொகை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜாய் கிரிசில்டா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் வழங்க ரங்கராஜ் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திருமணம் ஆன மாதம்பட்டி ரங்கராஜ், 2023 ஆம் ஆண்டு ஜாய் கிரிசில்டாவுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை.
பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ஜாய் கிரிசில்டா கருவுற்றபின் ரங்கராஜ் தன்னை விட்டு விலகிவிட்டதாகவும், பலமுறை தன்னிடம் இருந்து கருக்கலைப்பு நடத்தியதாகவும், சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
தற்போது தானே 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ள ஜாய் கிரிசில்டா, “வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை ரங்கராஜ்தான். எனவே, மாதந்தோறும் மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
















