முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சோமரசம்பேட்டையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மு. பரஞ்சோதி, எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைச் செயலாளர் புல்லட் ஜான், ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மீனவரணி பேரூர் கண்ணதாசன், அவைத் தலைவர் ராமு, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.பி. முத்து கருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், இளைஞர் அணி புங்கனூர் கார்த்தி, தேவா, ஐ.டி. பிரிவு திருப்புகழ் செல்லத்துரை உள்ளிட்ட திரளான கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல், புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப. குமார், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றியச் செயலாளர்கள் ராவணன், எஸ்.கே.டி. கார்த்திக், நகரச் செயலாளர் பாண்டியன், பகுதிச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர் என்கிற கோபால் ராஜ், தண்டபாணி, பேரூர் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ். ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என். கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் காசிராமன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் என ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.
















