குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ஆவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியா அரசியலமைப்பின்படி, குடியரசுத் துணைத் தலைவர் பதவி, அதிகார வரிசையில் இரண்டாவது உயரிய பதவியாகும். இந்த பதவி காலியாகும் நேரத்தில், அதனை மிகவும் விரைவாக நிரப்ப வேண்டும் என அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இருப்பினும், புதிய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு நடக்கும் வரை அந்த பொறுப்பை யார் கவனிப்பார் என்பது குறித்து நேரடியாகக் கூறப்படவில்லை.
இதற்கிடையில், மாநிலங்களவையின் தற்போதைய துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் இந்த இடைக்காலப் பொறுப்பை வகிப்பார் என நம்பப்படுகிறது. மாநிலங்களவையின் தலைவர் பதவியையும், துணைத் தலைவர் இல்லாத நிலையில், துணைத் தலைவர் தற்காலிகமாக வகிக்கலாம் என்று விதிமுறைகள் கூறுகின்றன.
விரைவில் தேர்தல் அறிவிப்பு
ஜெகதீப் தன்கர் பதவியை விலக்கியதைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை நிரப்ப தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாவதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
தன்கர், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டு, 75% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு எதிராக போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 25% வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்தத் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிக்கால விவரம்
ஜெகதீப் தன்கர் 2 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த நிலையில் விலகியுள்ளார். எனவே, அடுத்ததாக தேர்வாகும் குடியரசுத் துணைத் தலைவர் முழு 5 ஆண்டு காலத்திற்கு பதவி வகிக்க வாய்ப்பு கிடைக்கும்.