மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசிய உரையை, “பழைய பஞ்சாங்கம் தான்” என்று பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் இன்று தனது கட்சியை எவ்வாறு வளர்த்துக் கொள்வது, கூட்டணியில் யாரை சேர்க்கப் போகிறார் என்பதையே சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணி தவறா, திமுக கூட்டணி தவறா, அதிமுக கூட்டணி தவறா, பாஜ கூட்டணி தவறா என மற்றவர்களை குறைசொல்வதை விட, அவரிடம் நம்பிக்கை இருந்தால் தலைவர்கள் தானாகவே வருவார்கள் என்ற நம்பிக்கையோடு பேச வேண்டும்” என்றார்.
பலவீனம் குறித்து பேச்சு
“அரசியலில் எப்போதும் தங்களின் பலத்தைப் பற்றி தான் பேசுவார்கள். ஆனால், மதுரை மாநாட்டில் விஜய் தங்களின் பலத்தைப் பற்றி பேசவில்லை; பிறரின் பலவீனத்தைப் பற்றியே பேசினார். தொண்டர்கள் விஜய்யின் பலம் என்ன, அவர் எப்படி மாற்றாக இருக்க முடியும் என்பதையே எதிர்பார்த்தனர். திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிறார், ஆனால் அதற்கான ஆரோக்கியமான கருத்து என்ன என்பதை சொல்லவில்லை. நான் பார்த்த வரையில் பழைய பஞ்சாங்கம் தான்,” என அண்ணாமலை சாடினார்.
பாஜவுக்கு எதிரான விமர்சனத்திற்கு பதில்
“விஜய் பாஜவை பாசிசம் என விமர்சித்தார். ஆனால் பாஜ தேசிய அளவில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. ஒடிசா உட்பட பல மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். தமிழக மக்கள் பாஜவை சக்தி வாய்ந்த கட்சியாகவே பார்க்கிறார்கள். பிரதமர் மோடி உலகிற்கு தேவைப்படும் தலைவராக இருப்பதால், மக்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் 18 சதவீத வாக்குகளை பாஜ கூட்டணி பெற்றது. அந்த வாக்குகள் அனைத்தும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவை அல்ல, தமிழக மக்களின் மரியாதையால்தான் கிடைத்தது,” என்றார்.
கச்சத்தீவு விவகாரம்
“விஜய் தனது படங்களில் மீனவராக நடித்துள்ளார். அப்போது கச்சத்தீவு குறித்து பேசியிருக்கிறாரா? பிரதமர் மோடி தான் கச்சத்தீவை முதன்முதலில் தேசிய மட்டத்தில் எடுத்துரைத்தார். 1972ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கச்சத்தீவை கொடுத்துவிட்டனர்; 50 ஆண்டுகளாக யாரும் பேசவில்லை. இன்று பாஜ அதைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளது. கச்சத்தீவை மீட்கும் உறுதியுடன் நாங்கள் உள்ளோம்,” என அவர் குறிப்பிட்டார்.
திமுக அரசு மீது குற்றச்சாட்டு
“தெனாலி படத்தில் கமல் போல, திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் பயம். மோடி, அமித் ஷா, பார்லிமென்டில் புதிய சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் – எதையும் பார்த்தாலும் பயப்படுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் 31வது நாளில் பதவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்றாலும் பயப்படுகிறார்கள். இந்த பயம் தான் திமுக அரசின் அடையாளமாக உள்ளது,” என்று அண்ணாமலை தாக்கினார்.
விஜய்க்கு வாழ்த்துக்கள்
“ரேம்ப்வாக் வரும் போது கை தட்டலாம்; ஆனால் அதை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றால் பலமான சித்தாந்தம் வேண்டும். மக்கள் உள்ளூர் வேட்பாளர் உண்மையாக 5 ஆண்டுகள் பணியாற்றுவார்களா என்பதையே பார்ப்பார்கள். விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆனால், ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்,” என அவர் சவால் விட்டார்.
“விஜய் பேசும் மொழி, திமுக பேசும் மொழியைப் போலவே இருக்கிறது. அப்படியானால் மக்கள் அவரை மாற்றாக எப்படி பார்க்க முடியும்? இந்தியனாக 2014க்குப் பிறகு மரியாதை அதிகரித்ததா குறைந்ததா? உலகம் இந்தியர்களைப் பெருமையோடு பார்க்கும் நிலையை ஒரே நபர் – மோடி – தான் கொண்டு வந்தார்,” என அண்ணாமலை வலியுறுத்தினார்.
மேலும், “30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்ற மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார்.