நாமக்கல் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது, திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தொடர்பாக விமர்சனங்களைத் தந்தார்.
விஜய் பேசுகையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சிலர் புதுமையான வாக்குறுதிகளை சொல்லச் சொல்கிறார்கள். ஆனால், ‘செவ்வாய் கிரகத்தில் ஐடி பார்க்’, ‘காற்றில் கல் வீடு கட்டப்படும்’, ‘அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை’, ‘வீட்டுக்குள் விமானம் ஓட்டப்படும்’ என வாக்குறுதிகளை விடுவது யாருக்கும் சாத்தியமா? நமது முதல்வர் சிக்கியவரை எப்படி சந்திக்கிறார் என்று பார்ப்பார். அதுபோல் நாங்கள் பொய் வாக்குறுதிகளை விட மாட்டோம்” என்று கூறினார்.
மேலும், “பாஜக அரசாங்கத்துடன் நாங்கள் ஒருபோதும் ஒத்துப்போக மாட்டோம். திமுகவுடன் மறைமுக உறவுகளை போல நாங்கள் நடத்த மாட்டோம். சிலர் அம்மாவைப் போல் ‘மூச்சுக்கு 300 தடவை’ என்று சொல்லி, ஜெயலலிதா கூறிய விஷயங்களை மறந்து, பொருந்தாத கூட்டணிகளை அமைத்துக் கொண்டு தமிழக நலனுக்காக செயல்படுவதாகக் கூறுகிறார்கள். நாங்கள் அதுபோல நடக்க மாட்டோம்” என்றார்.
விஜய் பாஜக செயல்பாடுகளையும் கேள்விக்குறியாகக் குறிப்பிடினார். “தமிழகத்திற்கு NEET’யை ஒழித்ததா? கல்விக்கான நிதியை முழுமையாக வழங்கியதா? தமிழக நலனுக்காக தேவையான பணிகளை செய்ததா? இதற்கு பதிலாக சந்தர்பவாத கூட்டணிகளை அமைத்துவிட்டு மக்கள் மனதில் குழப்பத்தை உருவாக்குகிறார்கள்” என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டு, “அவர்கள் நேரடி உறவுக்காரர்கள் என்பதைக் அனைவரும் அறிந்திருப்பார்கள். அதே சமயம் திமுக குடும்பம், பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருக்கிறது. நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களிப்பது போலவே ஆகும்” என்றார்.
பரப்புரையை முடித்து அவர், “மக்களே, யோசித்து நல்ல முடிவெடுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லது நடக்கும்” என தெரிவித்தார்.