“நேர்மையான போலீஸ் அதிகாரியை பழிவாங்குவது அரசுக்கு அழகு அல்ல” – இ.பி.எஸ்., கண்டனம்

“நேர்மையான போலீஸ் அதிகாரியை பழிவாங்குவது ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக அரசின் வாக்குறுதிகளை மக்கள் உணர்ச்சிப் பூர்வமாக மதிப்பீடு செய்யும் வகையில் ‘ரிப்போர்ட் கார்ட்’ எனும் திட்டத்தை அதிமுக அறிமுகப்படுத்தியது. இந்த ‘ரிப்போர்ட் கார்டு’ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார் இ.பி.எஸ்.

போலீசாருக்கு மரியாதை இல்லையா?

அப்போது அவர் கூறியதாவது: “திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டால் அவருக்கு சஸ்பெண்ட் ஆணைதான் பரிசாக கிடைக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களைக் காக்கும் போலீசாருக்கு அரசு ஆதரவு தர வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால், அவர்களிடம் பேசி தீர்வுகளை காண வேண்டும். ஆனால் பழிவாங்கும் நடவடிக்கைகள் நல்ல அரசுக்கு அழகு அல்ல,” என்றார்.

அதிமுக-பாஜ கூட்டணியை குறை கூறுவது ஏன்?

அதிமுக-பாஜ கூட்டணியை சிலர் விமர்சிப்பது பற்றி கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் உள்துறை அமைச்சரை சந்தித்தால் என்ன தவறு? அவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர் தானே! இதில் எந்தவிதமான தவறும் இல்லை. கூட்டணி அரசாக நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம். ஒவ்வொரு கட்சியும் தங்களது நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதத்தில் வேலை செய்வது இயல்பே,” என்று கூறினார்.

காவிரி குண்டாறு திட்டம் தொடரும்

கிராமப்புறங்களில் வீட்டுக்காக அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் புதிய நடைமுறையை விமர்சித்த இ.பி.எஸ்., “விவசாயிகள் எல்லோரும் படித்தவர்கள் அல்ல. தோட்டத்தில் வீடு கட்ட அனுமதி வேண்டும் என்றால் அதை விளக்கும் வகையில் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் ஆதரவைத் தூண்டி மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் போது, காவிரி குண்டாறு திட்டம் தொடரும்,” என்றும் உறுதிபட கூறினார்.

Exit mobile version