காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேறுங்கள் : இஸ்ரேல் ராணுவம் உத்தரவு

காசா பகுதியில் விரைவில் முழுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தொடங்கிய தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது.

அவ்வப்போது சிலர் விடுவிக்கப்பட்டாலும், இன்னும் 48 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் பிணைக்கைதிகளில் ஒருவரின் வீடியோ வெளியாகி, அதில் அவர் எலும்புக்கூடு போல் சதை களைந்து காணப்பட்டதோடு, தன் சவக்குழியை தானே தோண்டிக் கொண்டிருப்பது பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பிணைக்கைதிகள் காசா பகுதியின் அடிக்கடி அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களை மீட்க வேண்டுமெனில் காசாவுக்குள் ஆழ்ந்த ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்க வேண்டுமெனும் தீர்மானத்தில் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. அதற்காக காசாவில் வசிக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பொதுவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இஸ்ரேல் அறிவித்த உத்தரவுகள் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே குறித்திருந்தன. ஆனால் இம்முறை, முழு காசா பகுதியையும் காலி செய்யும் வகையில் உத்தரவு பிறப்பித்திருப்பது, அங்கு விரைவில் பெரும் ராணுவ நடவடிக்கை நடைபெறப்போவதை உறுதிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

“காசாவை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால்தான் பிணைக்கைதிகளை விடுவிக்கும் நிலைக்கு ஹமாஸ் வரும்,” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Exit mobile version