பிரபல நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு என்ன நடந்து என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் டிவியில் அறிமுகமானவர் ரோபோ சங்கர். பின் சின்னத் திரையிலும் சினிமாவிலும் தனது வித்தியாசமான நடனம் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பு தளத்தில் வைத்து ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். படக்குழுவினர் உடனடியாக ரோபோ சங்கரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதல் கட்ட பரிசோதனையில் ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடும் குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்று எதிர்க்கப்பட்டது.
புதன்கிழமை காலை வரை பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர், மாலையில் அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் அதில் இருந்து குணமடைந்து வந்தார். அப்போது மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவருக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக்கொண்டார். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் வைத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று மாலையில் அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் மறுநாளே உயிரிழந்திருக்கிறார். ஐசியூவில் இருந்தபோது ரோபோ சங்கருக்கு என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. நம்பிக்கையோடு இருந்த அவரது குடும்பத்தினர் இந்த திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ரோபோ சங்கரின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.