‘கேப்டன் ஸ்ரேயாஸுக்கே இடமில்லையா ? ’ – ரசிகர்கள் கொந்தளிக்க வைத்த கொல்கத்தா அணியின் போஸ்டர் !

சென்னை :
2024 ஐபிஎல் சீசனில் அபார வெற்றியைப் பதிவு செய்து கோப்பையைத் தட்டிச் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வெற்றி நடைபோட்ட அந்த அணி, இறுதிப்போட்டியில் அதிரடியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.

இவ்வாறு கோப்பையை வென்ற நிலையில், பெரும்பான்மையான பாராட்டுகள் அணியின் பைலட் அல்லாமல் பயிற்சியாளர் கவுதம் காம்பீருக்கு சென்றன. அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு போதிய மதிப்பளிக்கப்படவில்லை. பின்னர் அவர் KKR அணியில் இருந்து விலக்கப்பட்டு, பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தற்போது நடந்து வரும் 2025 ஐபிஎல் சீசனில், கொல்கத்தா அணி பிளேஆஃப் வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியோ டாப் 2 இடத்தில் தடம்பதித்துள்ளது. இதன்மூலம், ஸ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்ஷிப் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். மூன்று வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் கட்டத்திற்குள் அழைத்துச் சென்ற ஒரே கேப்டனாகவும் அவர் கருதப்படுகிறார்.

இந்நிலையில், 2024 கோப்பை வெற்றியின் ஒரு ஆண்டு நினைவாக KKR அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்றில், ஆண்டின் வெற்றி நாயகர்களாக ரஸல், சுனில் நரேன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் மட்டும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த புகைப்படத்தில் இடம் பெறவில்லை. இது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் KKR அணிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பின்னர், ரசிகர் கோரிக்கையின்பேரில், ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்ற மற்றொரு புகைப்படத்தை KKR அணி வெளியிட்டது.

முன்னதாக, மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ், “எங்கள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒவ்வொரு வீரரையும் சிறப்பாக கையாள்கிறார். நெருக்கடியான நேரங்களில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தோம். முதுகில் குத்துவது எளிது, ஆனால் நம்பிக்கையை பேணுவது முக்கியம்,” எனக் கூறி, கடந்த அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.

இவ்வாறு தனது மறைமுகக் கருத்துகளின் மூலம், கடந்த வருடங்களில் பெற்ற புறக்கணிப்பை ஸ்ரேயாஸ் வெளிப்படையாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version