வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் ஈடு செய்யும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசுக்கு எழுந்துள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில், “தீபாவளி தினம் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். பண்டிகை இரவு பட்டாசு வெடித்து மகிழும் நேரத்தில் பலரும் வெளி ஊருக்கு செல்ல முடியாது. மறுநாள் அதிகாலை பள்ளி அல்லது வேலைக்கு திரும்ப வேண்டிய நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்கி, பின்னர் வேறு நாளை பணிநாளாக அறிவிக்கலாம்,” என கூறியுள்ளார்.
அதேபோல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விதிமுறையின்படி பொதுவிடுமுறை அல்ல. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு சிறப்பு விடுமுறையாக அறிவித்து வந்துள்ளது.
இம்முறைவும் அந்த வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசு அறிவிப்பை வெளியிட்டால், பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 18 (சனி), 19 (ஞாயிறு), 20 (திங்கள் – தீபாவளி), 21 (செவ்வாய்) என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் விடுமுறை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.