அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், கோபியில் செய்தியாளர்களை சந்தித்த போது, கட்சியின் உள்கட்சி நிலைமை குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார். இதற்கிடையில், “அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் நொடியும் யோசிக்காமல் தனது பதிலை வழங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறிய செங்கோட்டையன், “கட்சியை விட்டு விலகிச் சென்ற அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே எதிர்கால வெற்றியைப் பெற முடியும்” என்றார். இதற்காக 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருப்பதாகவும், ஒருங்கிணைப்பிற்கான முயற்சிகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பொதுச்செயலாளர் பதவி குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன்,
“இயக்கத்திற்காக நான் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இயக்கம் உயிரோட்டத்துடன் நீடிக்க வேண்டும். ஜெயலலிதா சொன்னது போல நூறாண்டுகள் ஆட்சி செய்யும் இயக்கமாக அதிமுக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சிகளை தொடங்கியுள்ளேன்” என்றார்.
மேலும், “எங்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது நடைபெறவில்லை என்றால், மனமுடையவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் மீண்டும் இணைக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எடப்பாடியின் சுற்றுப்பயணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என அவர் எச்சரித்தார்.
இதன் மூலம், அதிமுகவின் உள்கட்சி நிலைமை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.