சென்னை : மைக் முன் பேசும் போது அரசியல்வாதிகள் தங்களை மன்னர்களாக நினைத்து விடுகிறார்கள் என, தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவருக்கு பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்தன.
இதன் காரணமாக, திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டதுடன், பின்னர் அமைச்சர்பதவியும் பறிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கூறியதாவது:
“மைக் முன் பேசும் போது தங்களை மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள்.”
“அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும்போது யோசித்து பேச வேண்டும்.”
“அவர்கள் சர்ச்சைக்குரிய பேச்சுகளை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.”
வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.