“அ.தி.மு.க.,வை மீட்க முடியாத இ.பி.எஸ்., தமிழகத்தை மீட்க போவதாகக் கூறுகிறார்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், “தமிழக வரலாற்றில் இதுவரை எதுவும் காணாத அளவிற்கு பல திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நிதி நெருக்கடிகள் மற்றும் மத்திய அரசின் தடைச் சூழ்நிலையையும் மீறி மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வருகிறோம். இதை தாங்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., ‘தமிழகத்தை மீட்போம்’ என்கிற பயணத்தை தொடங்கியுள்ளார்” என்றார்.
“தமிழ்நாடு என கூட சொல்வதைத் தவிர்க்கும் கூட்டத்துடனே கூட்டணி வைத்தவர் இ.பி.எஸ். அவரால் எப்படி மாநில உரிமைகளைப் பேச முடியும்? துரோகம் செய்வதே அவருக்கு தெரியும். அ.தி.மு.க.வையே மீட்க முடியாத இவர், தமிழகத்தை மீட்பது எப்படி சாத்தியம்?” எனக் கேள்வியெழுப்பினார்.
“கரப்ஷன், கமிஷன் ஆட்சி!”
முன்னைய ஆட்சியை நினைவுகூர்ந்த அவர், “ஏலம், கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என கூவத்தூரில் நடந்த நிகழ்வுகள் நாடு நினைவில் வைத்திருக்கிறது. பா.ஜ.,விடம் தமிழர்களின் உரிமைகளை அடகு வைப்பது போன்ற ஆட்சியை நடத்தினீர்கள். அந்த தவறுகளை சரி செய்ததன் பலனாக இன்று தமிழகத்தின் வளர்ச்சி இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. தலை நிமிர்த்தும் தமிழகத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.
வீடு வீடாக மக்களை சந்தித்த ஸ்டாலின்
முன்னதாக திருவாரூரில் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்துள்ள தி.மு.க., ஓரணியில் வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இன்று திருவாரூரில் கருணாநிதி வாழ்ந்த சந்நிதி தெருவில் நானும் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டேன். இங்கு 54,310 புதிய உறுப்பினர்கள் மற்றும் 30,975 குடும்பங்களை இணைத்து முதலிடம் பிடித்துள்ளோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.