சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய டெத் ஓவர் பந்துவீச்சாளராக வளர்ந்த மதீசா பதிரானா குறித்து புதிய தகவல்கள் வெளியாகி, சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலிங்காவின் ஸ்லிங்கி ஆக்சனைப் போலவே 140 கிமீ வேகத்தைத் தாண்டி பந்துவீசும் திறமையால், பதிரானாவை மிக இளம் வயதிலேயே கண்டறிந்தது சிஎஸ்கே. தோனியின் தலைமையில் பட்டைத்தீட்டப்பட்ட அவர், கடந்த சில சீசன்களில் அணிக்கு டெத் ஓவர்களில் பல வெற்றிகளைத் தந்து முக்கிய பங்காற்றினார்.
2025 ஐபிஎல் தொடருக்காக அவரை 13 கோடி ரூபாய்க்கு தக்கவைத்த சிஎஸ்கே, பதிரானாவை “பரம ஆயுதம்” என மதித்தது. ஆனால் சமீப மாதங்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான காயங்கள், பந்துவீச்சு வேகத்தில் வீழ்ச்சி, ஆக்சனில் மாற்றங்கள் போன்ற காரணங்களால் அவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
மீண்டும் ஏலத்திற்கு அனுப்பும் சிஎஸ்கே திட்டம்?
கிறிக்இன்ஃபோ வெளியிட்ட தகவலின் படி, 2026 ஐபிஎல் ஏலத்திற்கான தக்கவைப்பு பட்டியலை சமர்ப்பிக்க முன்பு, சிஎஸ்கே அணி பதிரானாவை வெளியேற்றும் யோசனையில் உள்ளது. ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்பட்ட சூழலிலேயே, இந்த முடிவு மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
2024 ஏலத்திற்கு முன்பும், மும்பை இந்தியன்ஸ் அணி பதிரானாவை வர்த்தகம் செய்ய முயற்சித்ததாக தகவல் வந்தது. அப்போது, தன்னுடைய சமூக வலைதளத்தில் “விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது” என பதிவிட்டிருந்த பதிரானாவின் அந்த வார்த்தைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
வெளியேற்றப்பட்டாலும்… மீண்டும் ஏலத்தில் எடுப்பார்களா?
தக்கவைப்பு பட்டியலில் இருந்து பதிரானாவை நீக்குவதற்கு சிஎஸ்கே தீர்மானித்தாலும், மீண்டும் ஏலத்தில் இவரைப் பெறும் முயற்சி இருக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணியின் பட்ஜெட் மேலாண்மை மற்றும் நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் தக்கவைப்பு பட்டியல் இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே பதிரானா – சிஎஸ்கே தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எந்நேரமும் வெளியாகலாம்.

















