முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், தனது அரசுப் பணியை முடித்துக்கொண்டு, அரசியல் பயணத்தைத் தொடங்க தயாராகி உள்ளார். குடியரசுத் தலைவர் அலுவலகம் அவருடைய விருப்ப ஓய்வை ஏற்றுக்கொண்ட நிலையில், சமூக வலைதளமான எக்ஸில் “A New Beginning” என்ற தலைப்பில் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“எனது பணிகள் அனைத்தையும் ஒப்படைத்திருக்கிறேன். மருத்துவராகவும், ஐஆர்எஸ் அதிகாரியாகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் ஈடுபட்டேன். உணர்ச்சிப்பூர்வமான தருணம் இது. என்னுடன் பணியாற்றிய சகாக்கள், சீனியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. முழுமையான நிறைவுடன் ஐஆர்எஸ் பணியை விட்டுவிடுகிறேன். Miles to go before I sleep” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அவர் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தொடங்கியது முதல் ஆலோசகராகப் பணி செய்த அருண்ராஜ், ஜூன் முதல் வாரத்தில் விஜய்யை நேரில் சந்தித்து, கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு “இணை பொதுச் செயலாளர்” பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, விஜய் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ‘Welcome Arunraj sir’ என உருக்கமான வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
தவெகவில் அண்மையில், விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா, அதிமுகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். பேச்சாளர் ராஜ்மோகன் தற்போது கொள்கை பரப்பு செயலாளராகப் பணியாற்றி வருகிறார். முன்னாள் பத்திரிகையாளர் மருது அழகுராஜ் மற்றும் காளியம்மாள் போன்றோரும் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
விஜய், தனது திரைப்பட பணி முடிவடைந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் வாரம் முழுக்க கள அரசியலில் தீவிரமாக செயல்படவுள்ளதாகவும், மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா, பூத் கமிட்டி கூட்டங்கள், மக்கள் சந்திப்பு உள்ளிட்ட பல அரசியல் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அரசு பணியில் சிறப்பாக திளைத்த அருண்ராஜ், இப்போது அரசியலிலும் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளார்.