பாகிஸ்தான்-இந்தியா இடையிலான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட டாடா ஐபிஎல் 2025 போட்டிகள் மீண்டும் மே 17-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.
பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை அழித்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலளிக்க பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்தியாவை தாக்கிய நிலையில், இருநாடுகளும் நேரடியாகச் சண்டையில் ஈடுபட்டன.
இந்த நிலைமை உலகளவில் கவலையை ஏற்படுத்த, அமெரிக்கா சமாதானத்திற்கு முயற்சி செய்தது. அதன் பலனாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டதை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். இதை இந்திய அரசும் அங்கீகரித்ததைத் தொடர்ந்து, தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், பிசிசிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது :
“மீண்டும் ஐபிஎல் தொடங்குவதில் மகிழ்ச்சி. அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையின் பின்னர், சீசனின் மீதமுள்ள 17 போட்டிகளை 6 மைதானங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம். மே 17 முதல் ஜூன் 3 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இரட்டை போட்டிகளும் உள்ளடக்கம். பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான விவரங்கள் இதோ:”
பிளேஆஃப் கால அட்டவணை :
தகுதிச் சுற்று 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
தகுதிச் சுற்று 2 – ஜூன் 1
இறுதிப் போட்டி – ஜூன் 3
பிளேஆஃப் போட்டிகளுக்கான இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மீண்டும் ஆர்வமுடன் காத்திருக்கும் ஐபிஎல் களமிறங்க இருக்கிறது.