மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144 வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் தமிழ்ச்செம்மல் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் சங்கத்தை சார்ந்த ஆசிரியர்கள் பலர் பங்கேற்று உரையாற்றினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் பி.காளியம்மாள் “பாரதி ஒரு காலக்கண்ணாடி” என்ற தலைப்பில் விழாப்பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் பெண்மையும், தமிழும் வேறுவேறு அல்ல இரண்டுமே அழகு, அன்பு செழுமை, நிறைந்தது. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதை வேறுவேறாக பார்க்காதிர்கள் என்பதுதான் அனைவரின் கனவு. உங்களில் இருந்து வந்தவர்கள்தான், உங்களுக்காக இருப்பவர்கள் என்று நாம் உணர்ந்கொண்டாலே சமஉரிமை கொடுத்ததாக அர்த்தம் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள் கூறுகையில்:- ஆகப்பெரும் ஆற்றல் படைத்த பெண்களை ஒருசில விளம்பரங்களுக்கு ஒரு காரணப் பொருளாக முன்னிலைப்படுத்தி மாற்றி பயன்படுத்துவது ஏற்கவே முடியாத ஒன்று. பெண்களை போக பொருளாக பார்ப்பது சினிமாக்களில் கதைக்கு தொடர்பில்லாத வகையில் பெண்களை நடனம் ஆட வைப்பது, மதுபான கூட்டங்களில் நடனமாட வைப்பது போன்ற இடங்களில் மட்டும் பெண்களை பார்க்காதீர்கள். அப்படி ஒரு பார்வையில் பெண்கள் இல்லை. பெண்கள் மிகப்பெரிய திறன் கொண்ட வலிமை மிக்கவர்கள் அவர்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறேன். பெண் சுதந்திரம் என்று பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நம் வீட்டில் நாம் எப்படி பெண்களை நடத்துகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது. அரசியலில் பொதுப்பார்வையில், வீடுகளில், பெண்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டு சாதித்துள்ளதாக சொல்கிறார்கள். ஒருஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த பெண்கள் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பேசுகிறார்கள் தங்கள் கனவுகளை மெய்பிக்க தனக்கான அரசியலை மேம்படுத்திக் கொள்ள வருகிறார்கள், ஆனாலும் விமர்சனங்கள் ஒரு பெண் இவ்வளவுதான் செய்யணும் என்ற கட்டுப்பாடாக இருக்கட்டும், இதைத் தாண்டி அவர்கள் யோசிக்க கூடாது என்ற நிலைப்பாடாக இருக்கட்டும் இதை வீட்டிலிருந்து தொடங்கி நாடு வரை அப்படித்தான் உள்ளது என்ற வலியோடு சேர்ந்துதான் அந்த வார்த்தைகள் வருகிறது. மொழி அழிந்தால் இனம் அழியும் என்று சீமான் சொல்லியுள்ள கருத்து ஒவ்வொருத்தரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து. எனக்கு மொழி சார்ந்த புரிதலை ஏற்படுத்தியவர் சீமான். சரியான கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய அரசியல் பயணம் மக்களுடன் சேர்ந்து இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவேன். மக்களின் பிரதிநிதியாக நிறபேன். எப்படி எந்த சூழலில் என்பது வரும் காலத்தில் புரியும். கட்சி ஆரம்பிப்பது, ஒரு கட்சியில் இணைவது குறித்த முடிவை ஒருநாள் சொல்வேன். ஒரு கட்சியை நோக்கி ஒருவர் போனார் என்பது அது அவரின் தனிப்பட்ட முடிவு, தனிப்பட்ட தேர்வு, அதற்குப் பிறகு அவர்கள் மக்கள் பணியில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியது தவிர ஏன் அந்த அமைப்பிற்கு போனார்கள் என்பது கேள்விக்குறியது அல்ல. நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி ஓராண்டு ஆகியுள்ளது. அதற்கான விடை அவரே சொல்லி இருப்பதாக நான் நம்புகிறேன். எல்லாக் கட்சியுடன் இணையப் போகிறார் என்று சொல்லியுள்ளார்கள் எந்த கட்சியில் இணைகிறேன் என்று ஒருநாள் சொல்வேன். அனைத்து கட்சிகளும் தன்னிடம் 30% 33, 40% வாக்கு வங்கி உள்ளது என்று வரையறை வைத்து பேசுவார்கள். அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தெரியும். அந்த வாக்கு வங்கியின் அடிப்படையில் அவர்களின் கட்டமைப்பை நகர்த்துவது வேலையை செய்வது தவறு என்று நாம் சொல்ல முடியாது. திருப்பரங்குன்றம் பிரச்சனை வரலாற்று நகர்வுடன் சேர்ந்து கேள்வியும் வருகிறது. கந்தனுக்கான மலையா சிக்கந்தர் மலையா என்ற கேள்விக்கு வரலாற்று தேடுதல் இல்லாமல் இது எதைச் சார்ந்தது என்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் தற்போதைய சூழலில் மதம் சார்ந்து ஜாதி சார்ந்து எந்த பிரச்சனையும் வராமல் அங்கு வாழும் மக்கள் இணக்கமாக வாழ்கிறோம் என்று சொல்லும்போது அந்த இடத்தில் பிரச்சனை வருவதும் பிரச்சனையை உண்டாக்குவதும் அதை சார்ந்து நீதிமன்றத்திற்கு செல்வதும், நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடமாட்டாங்க என்று சொல்வது என்னைப் பொறுத்த வரைக்கும் இணக்கமாக இருக்கின்ற மக்களிடம் ஒரு பிரிவை ஏற்படுத்துகின்ற ஒரு குதர்க்கமான சூழ்நிலையாக மாற வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அப்பகுதியில் வாழும் மக்கள் சிக்கல் என்று சொன்னால் அதற்கு துணை நில்லுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை என்று மக்கள் சொல்லும்போது அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். எல்லா கடவுளும் அன்பை தான் போதித்துள்ளபோது ஏன் இந்த பிரிவினை. கடவுள் சொன்னதை மறுந்து அங்கு பெரிய பிரச்சனை நடப்பதை மக்கள் தான் கவனிக்க வேண்டும். இதை வைத்து அரசியல் ஆக்குவதை முற்றிலுமாக தகர்க்க வேண்டும் என்றார்.
















