கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலை குறைசொல்லும் வகையில் சர்வதேச ஊடகங்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தவறான தகவல்களை பரப்பி வந்தன.
இந்தக் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அல் ஜசீரா, ராய்ட்டர்ஸ், ஏபிசி (ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்), டிடபிள்யூ (ஜெர்மனி), கார்டியன் (பிரிட்டன்), பிபிசி (பிரிட்டன்), இன்டிபெண்டன்ட் (பிரிட்டன்) போன்ற முன்னணி சர்வதேச ஊடகங்கள் அந்தக் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு செய்திகளை வெளியிட்டன.
ஆனால், புகாரை அளித்த முன்னாள் ஊழியர் சமீபத்தில் தானே திரும்பி, “தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் தூண்டுதலால் தான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்தேன்” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதன் மூலம், தர்மஸ்தலா கோவிலில் பெண்கள் கொலை செய்யப்பட்டதாக பரப்பப்பட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனால், அந்தச் செய்திகளை பெரிதாக்கி வெளியிட்ட சர்வதேச ஊடகங்கள் தற்போது அமைதியாக மௌனமாகி விட்டன. உண்மையில், இந்தச் செய்திகளை வெளியிட்டது சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அல்ல, புகழ்பெற்ற இந்த இந்து கோவிலின் மரியாதையை குலைப்பதற்காகவே என பலரும் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
மேலும், இந்தியா சர்வதேச அரங்கில் முன்னிலை பெறத் தொடங்கியிருப்பதை சகிக்க முடியாமல் மேற்கத்திய நாடுகள் பின்னணியில் சதித்திட்டமிட்டிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. குறிப்பாக, அந்த முன்னாள் ஊழியரின் பின்னணியில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இருப்பதாக வந்த தகவல் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோவிலின் புகழை கெடுக்கும் சதியும், இந்திய புனிதத்தலங்களின் மரியாதையை உலகளவில் பாதிக்கும் முயற்சியும் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த மத்திய அரசு என்.ஐ.ஏ. அல்லது சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் வலியுறுத்தலாக உள்ளது.