தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை திண்டுக்கல் ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியில் நீண்டகாலமாக நிலவி வரும் நிலப் பிரச்சனை மற்றும் மண்டு கருப்பணசாமி கோயில் வழிபாடு தொடர்பான சட்டப் போராட்டத்தில் புதிய திருப்பமாக, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது. இப்பகுதியில் உள்ள கோயில் முன்பாக அமையப்பெற்றுள்ள காலி இடத்தைப் பயன்படுத்துவதில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்து சமூகத்தினர் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழிபாட்டிற்கு அனுமதி வழங்கி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த உத்தரவைச் செயல்படுத்தினால் அப்பகுதியில் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கருதிய மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமம் முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் நிலைநிறுத்தியது. நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோயிலைத் திறந்து பூஜை செய்யவும், தீபம் ஏற்றவும் வழங்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேல்முறையீட்டு அமர்வின் இந்தத் தடையைத் தொடர்ந்து, நிலுவையில் இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போதைய நிலையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு சமூகத்தினரிடையே சுமூகமான தீர்வு காண அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version