தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கான சேமிப்புக் கிடங்கு ரூபாய் 2.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
அதனை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
அப்போது அவர் விவசாயிகளிடையே பேசியபோது, வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்காக சேவை செய்வதற்காகவே இருக்கிறீர்கள். எனவே விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
ஏனென்றால் தற்போது விவசாய தொழில் நலிவடைந்து வருகிறது, பெண் வீட்டாரிடம் சென்று மணமகன் விவசாயி என்றாலே பெண் கொடுக்க மறுத்து விடுகிறார்கள், எனவே விவசாயிகள் முன்னேற்றதற்காக தமிழக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று பேசினார்.
எம்எல்ஏவின் இந்த ருசிகரப் பேச்சு விவசாயிகளை உற்சாகப்படுத்தியது. இந்த நிகழ்வில் வேளாண்மை துறை அதிகாரிகள் திரளான விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்..