த.வெ.க. கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்தால் தி.மு.க.,க்கு லாபம் – உளவுத்துறை அறிக்கை

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியுடன் இணைகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. இதேசமயம், அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க. உடன் த.வெ.க. கூட்டணி அமைந்தால், அதனால் தி.மு.க.க்கு நன்மை ஏற்படும் என உளவுத்துறை சமீபத்தில் அரசுக்கு அளித்துள்ள அறிக்கை தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.

நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கடந்த மாதம் முதல் கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியது. மாநிலம் முழுவதும் 120 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டு, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. வாரந்தோறும் நடைபெறும் விஜயின் மாவட்ட சுற்றுப்பயணங்கள் கட்சிக்கு ஆற்றல் ஊட்டியதாக கூறப்பட்டது.

ஆனால், கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பொதுவெளி நடவடிக்கைகளில் இருந்து விலகி வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், விஜயை கூட்டணிக்குள் இழுப்பதற்கான முயற்சிகள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தரப்பில் ரகசியமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள், த.மா.கா. தலைவர் வாசன் உள்ளிட்டோர் த.வெ.க. தொடர்பில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, த.வெ.க. எந்த வடிவில் தேர்தலில் பங்கேற்றால் முக்கிய கட்சிகளுக்கு எவ்வாறு விளைவுகள் இருக்கும் என்பதை உளவுத்துறை ஆய்வு செய்துள்ளது.

அந்த அறிக்கையில், “த.வெ.க. தனியாக போட்டியிட்டால், 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள், இளம்பெண்கள், மற்றும் தி.மு.க.–அ.தி.மு.க. கூட்டணியை எதிர்க்கும் வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவளிக்கக்கூடும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் கூட த.வெ.க. நோக்கி நகரும் நிலை தென்படுகிறது. இதனால் தி.மு.க.க்கு சவால் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் த.வெ.க. அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க. உடன் இணைந்தால், சிறுபான்மையினர் வாக்குகள் மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே திரும்பும். அதுவே தி.மு.க.க்கு சாதகமாக அமையும்,” எனவும் அறிக்கை கூறுகிறது.

அதேபோல், த.வெ.க. காங்கிரஸ், வி.சி. ஆகிய கட்சிகளுடன் தனி கூட்டணி அமைத்தாலும், தி.மு.க. கூட்டணிக்கு சில வாக்கு இழப்புகள் ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிக்கையை தி.மு.க. தலைமையகம் ஆய்வு செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Exit mobile version