திருத்தங்கலில் விவசாய நிலங்களுக்குள் பாயும் தொழிற்சாலை கழிவுநீர் – கண்ணீரில் விவசாயிகள்

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில், தொழிற்சாலைகளின் அசுர வளர்ச்சியால் விவசாயம் படிப்படியாக அழிந்து வரும் வேதனையான சூழல் நிலவுகிறது. திருத்தங்கல் பேருந்து நிலையம் அருகே விருதுநகர் செல்லும் பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள பல ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்குள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியார் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சட்டவிரோதமாகப் பாய்கிறது. இதனால் வளமான விளைநிலங்கள் அனைத்தும் நஞ்சாகி வருவதாகப் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் நெல், வாழை மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டு வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

வழக்கமான நாட்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஒருபுறமிருக்க, மழைக்காலங்களில் இப்பகுதியில் பெய்யும் மழைநீரோடு இந்த ரசாயனக் கழிவுநீரும் கலப்பதால், அது காட்டாற்று வெள்ளம் போல் விளைநிலங்களுக்குள் புகுந்து மொத்தப் பயிர்களையும் நாசமாக்குகிறது. தற்போது பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் வாழை மரங்களில் இந்த நச்சு நீரின் தாக்கத்தால் பல்வேறு மர்ம நோய்கள் தாக்கி வருகின்றன. தண்டு அழுகல், இலைகள் கருகல் போன்ற பாதிப்புகளால் பயிர்கள் முதிர்ச்சியடையும் முன்பே அழிந்து விடுவதால், விவசாயிகளுக்குக் கடன் சுமை மட்டுமே மிஞ்சுகிறது. ரசாயனங்கள் கலந்த இந்த நீரால் மண்ணின் தரம் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் அங்கு எந்தப் பயிரையுமே விளைவிக்க முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “எங்கள் மூதாதையர் காலத்திலிருந்து செழிப்பாக இருந்த இந்தப் பூமி, இன்று கண்முன்னே தொழிற்சாலை கழிவுகளால் பாழாவதைக் கண்டு ரத்தம் சொட்டுகிறது. இது குறித்துத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடந்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான முறைகள் முறையிட்டும், இன்றுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிற்சாலை உரிமையாளர்களுக்குச் சாதகமாகவே அதிகாரிகள் செயல்படுவதால், நாங்கள் விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,” எனப் புலம்புகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, கழிவுநீரை விளைநிலங்களுக்குள் விடும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version