ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இதற்குமுன், இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் காயம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணி இதுவரை நடப்பு தொடரில் ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அசுர பலத்துடன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. லீக் மற்றும் சூப்பர்-ஃபோர் சுற்றுகளில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா வெற்றி பெற்றிருப்பதால், நாளைய இறுதிப் போட்டியிலும் இந்திய அணி முன்னிலை வகிக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நடந்த சுவாரஸ்யம் ரசிகர்களை பதட்டத்தில் ஆழ்த்தியது. 203 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை, 202 ரன்கள் எடுத்து போட்டியை டை ஆக்கியது. பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றாலும், அந்த ஆட்டத்தின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கால் தொடையில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டி முடிவதற்கு முன் அவர் அசவுகரியத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அவர் ஆசிய கோப்பை இறுதியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது அணித் தளம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடாத நிலையில், ஹர்திக் பாண்டியாவின் நிலையை பற்றிய தெளிவு எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி போட்டிக்கு முன்னதாக வெளியாகும் மருத்துவ அறிக்கையே அவர் விளையாடுவாரா என்பதைக் கூறும்.
















