கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் வாகனங்களை கண்டதில் மகிழ்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் எம்.பி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தற்போது தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள இன்ஸ்டிடூடோ டி எஸ்டுடியோஸ் அவன்சாடோஸ் (I.E.A) பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, மத்திய பா.ஜ. அரசை விமர்சித்தார். இதற்கு பா.ஜ. அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பஜாஜ் பல்சர் வாகனத்துடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர்,
“கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை காணும் போது பெருமையாக இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் தங்கள் படைப்பாற்றல் மற்றும் முயற்சியால் எத்தகைய சூழலிலும் வெற்றி பெற முடியும். சிறந்த சாதனை!” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்தியாவின் மத, மொழி, பாரம்பரிய பல்வகைமையை சுட்டிக்காட்டிய ராகுல்,
“இந்தியா என்பது அனைத்து தரப்பினருக்கும் உரிய இடம் வழங்கப்படும் ஒரு கலந்துரையாடல் நாடாகும். ஆனால் தற்போதைய சூழலில் ஜனநாயக நடைமுறைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இது மிகப்பெரிய அபாயத்தை உருவாக்குகிறது. சீனாவைப் போல சர்வாதிகார முறையில் மக்களை ஒடுக்கி ஒரு நாட்டை வழிநடத்த முடியாது,” எனவும் கூறியுள்ளார்.