உலகளாவிய போலீசாருக்காக அமெரிக்காவின் பர்மிங்காம் நகரத்தில் (அலபாமா) நடைபெற்ற 21வது உலக போலீஸ் விளையாட்டு போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை சப்னா குமாரி 3 பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சப்னா குமாரி, தற்போது ஹரியானாவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். போட்டியில், வில்வித்தை மற்றும் 3டி வில்வித்தை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பங்கேற்ற அவர், அதில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
வீரம் கொண்ட குடும்பம்
போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சப்னா குமாரி, அராவின் ரக்சி கார்டன் நவாடாவில் வசித்து வருகிறார். அவரது தந்தை ஜிதேந்திர பிரசாத் ஒரு டிராக்டர் மெக்கானிக்; தாயார் குந்தி தேவி ஆசிரியராக பணியாற்றுகிறார். குழந்தைப் பருவத்திலிருந்தே சப்னா, தனது மூத்த சகோதரி நூதன் கும்ஹாரியுடன் தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர், மூத்த வில்வித்தை வீராங்கனை முக்தி பதக் வழிகாட்டுதலின் கீழ் வில்வித்தையை விரிவாக கற்றுக்கொண்டார்.
சப்னாவின் மகிழ்ச்சியைப் பகிர்ந்த அவரது தந்தை, “என் மகள்களின் விளையாட்டுப் பற்றுக்காக எப்போதும் உறுதுணையாக இருந்தேன்” என கூறினார். மேலும், சப்னாவின் கணவர் ரஜ்ஜன் குமாரும் வில்வித்தை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சப்னாவின் இந்த சாதனையை பீகார் மாநில அரசு மற்றும் விளையாட்டு துறையினர் பாராட்டியுள்ளனர். இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சப்னா, இந்திய போலீசாரின் திறமையை உலகுக்கு காண்பித்துள்ளார்.