இந்தியா முழுவதும் நிலவி வரும் நக்சல் பிரச்னை விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில், சிஆர்பிஎப் படையின் கோப்ரா பட்டாலியன் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில், பல நக்சல் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரூ.1 கோடி பரிசுத் தொகைக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவர் சஹ்தேவ் சோரன் எனப்படும் பர்வேஷ், இந்த நடவடிக்கையில் ஒழிக்கப்பட்டார்.
அதேபோல் சஞ்சல் எனப்படும் ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் ராம்கேலவன் எனப்படும் பிர்சென் கஞ்சு ஆகியோரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வெற்றிகரமான நடவடிக்கையை தொடர்ந்து, வடக்கு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோ பகுதியில் நக்சல்வாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த வெற்றி நாடு முழுவதும் நக்சல் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுசெல்லும் வழிகாட்டியாக அமையும். விரைவில் இந்தியா முழுவதும் நக்சல் அச்சுறுத்தலிலிருந்து விடுபடும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















