திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில், வருங்கால விஞ்ஞானிகளான பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இந்திய ஏவுகணை அறிவியல்’ குறித்த சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பாராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆர்.எம்.கே கல்விக் குழுமங்களின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு நிகழ்வில், இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய டாக்டர் சிவதாணு பிள்ளை, “2047-ஆம் ஆண்டு இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், உலக அரங்கில் ஒரு மாபெரும் வல்லரசு நாடாகத் திகழ்வதே நமது இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டுமானால், இன்று வகுப்பறையில் இருக்கும் மாணவர்களைத் திறன்மிக்க இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவது மிக அவசியம். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ (Operation Sindhur) போர் நடவடிக்கையின் மகத்தான வெற்றிக்கு, நமது பிரமோஸ் (BrahMos) ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறன் தான் மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இது இந்தியப் பாதுகாப்புத் துறையின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் நவீன ஏவுகணைகளோடு நின்றுவிடாமல், புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயத் துறையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உறுதுணையாக உள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம் என்று மாணவர்களுக்கு உறுதிமொழி ஏற்ற்பித்த அவர், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்த மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக, ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே.ஏ. முகமதுஜுனைத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி டி.கோகுல், இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் கிரீன் இன்ஜினியர்ஸ் தலைவர் டாக்டர் எல்.ரமேஷ் மற்றும் சக்சஸ் செய்லர் எட் டெக் நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டு ஏவுகணை அறிவியலின் நுணுக்கங்கள் குறித்து விரிவுரையாற்றினர்.
இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற அறிவியல் போட்டியில், ஏவுகணைத் தொழில்நுட்பம் குறித்த வியக்கத்தக்கப் படைப்புகளை முன்வைத்த தாம்பரம் சாய்ராம் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மாநில அளவில் சுமார் 38 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வு, தமிழக மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த புதிய தேடலை உருவாக்கியுள்ளது.
