இந்தியா – பாகிஸ்தான் விளையாட்டுத் தொடர்கள் குறித்து மத்திய அரசின் உறுதியான நிபந்தனை!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் பின்னர், இந்தியா–பாகிஸ்தான் உறவில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் இனி நடைபெறாது என தகவல்கள் வெளியானது. இதனால், இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் குறைந்தது மூன்று முறை மோத வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஆடக்கூடாது என அரசியல் ரீதியாக அழுத்தமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இதுகுறித்து கடுமையாக விமர்சித்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் விளையாட்டு துறையிலும் எந்த உறவுகளும் இருக்காது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய வீரர்கள் பாகிஸ்தான் செல்லமாட்டார்கள்; பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள். மூன்றாவது நாட்டில்கூட இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாது” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஆசியக் கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச தொடர்களில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க முடியாது என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தானுடனான விளையாட்டுத் தொடர்புகள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவே தொடர்கிறது – இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது, பாகிஸ்தான் அணி இந்தியாவில் போட்டியிடாது. ஆனால், சர்வதேச பலத்தொடர்களில் மட்டும் இரு அணிகளும் பங்கேற்க வேண்டிய நிலை நீடிக்கிறது.

Exit mobile version