ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க அமெரிக்கா பல தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சிகள் ஆபத்தில் சிக்கியுள்ளன என்று, அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியாவுக்கு 50% வரி விதிப்பதாக அறிவித்தார். இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உள்துறையிலும், டிரம்ப்பின் இந்த நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சூழலில், ஜான் போல்டன் அளித்த பேட்டியில், “இந்தியா எதிர்பார்த்தபடி அமெரிக்க வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு இதேபோன்ற வரி விதிக்காத நிலையில், இந்தியா அதனை வேறுபாடாகக் காண்கிறது. ரஷ்யாவை பாதிக்க வேண்டி விதிக்கப்பட்ட இந்த வரிகள், இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். சீனாவுக்கு அதிக சலுகை வழங்குவது மிகப்பெரிய தவறு. இது, இந்தியாவை விலக்க பல ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட உத்திகளை பாதிக்கும்” என்று தெரிவித்தார்.
அதேபோன்று, அமெரிக்க வெளியுறவு கொள்கை நிபுணரும் முன்னாள் வர்த்தக அதிகாரியுமான கிறிஸ்டோபர் படில்லா, “டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு, அமெரிக்கா–இந்தியா உறவுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவின் நினைவில் நீண்ட நாள் நிற்கும்; அமெரிக்கா நம்பகத்தகுந்த கூட்டாளியா என்ற கேள்வி எப்போதும் நிலைத்திருக்கும்” என்று எச்சரித்தார்.