ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, தொடர்ச்சியாக டாஸில் தோல்வி காணும் அதிர்ஷ்டக் குறைவால் பேசுபொருளாகியுள்ளது.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. பெர்தில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அடிலெய்டில் இன்று நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்தது.
இதன் மூலம், கடந்த 17 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஒருமுறையும் டாஸ் வெல்லாத சோகச் சாதனையை பதித்துள்ளது. கடைசியாக, 2023 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா டாஸ் வென்றது என்பதே பதிவு. அதன்பின் தொடர் தோல்வி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிறது.
டாஸ் வெல்வது வெற்றியை உறுதி செய்யாது என்றாலும், பீச்சு நிலை மற்றும் வானிலை ஆகியவற்றை நன்கு புரிந்துகொண்டு திட்டமிட அணிக்கு உதவுகிறது. இருப்பினும், டாஸை இழந்தாலும் இந்தியா 16 ஆட்டங்களில் 10 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்திய மகளிர் அணியும் இதே நிலையை சந்தித்து வருகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியா டாஸை இழந்தது. இதன் மூலம், மகளிர் அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் டாஸை இழந்துள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் ஒரே நேரத்தில் டாஸில் அதிர்ஷ்டம் இழந்திருப்பது ரசிகர்களிடையே விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.

















