ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. எனினும், வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் 146 ரன்களில் ஆல் அவுட்
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஃபர்ஹான் (57), ஜமான் (46) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, வருண், அக்ஷர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
திலக் வர்மா அசத்தல்
147 ரன்கள் இலக்காக களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா (5), சுப்மன் கில் (12), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1) விரைவில் வெளியேறினர். எனினும் திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (33) ஆகியோர் துணைநின்றனர். இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கோப்பையைப் பெற மறுப்பு
போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சரான மொஹ்சின் நக்வி கோப்பை வழங்க மேடைக்கு வந்தார். ஆனால், இந்திய வீரர்கள் அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்து விலகி நின்றனர். இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா, “பாகிஸ்தான் இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியது. எனவே அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கோப்பையைப் பெற முடியாது. கோப்பை இந்தியாவுக்கே அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனால், வெற்றிப் பெற்ற அணிக்கு மைதானத்தில் கோப்பை வழங்கப்படாதது, ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகிறது.
நாடு முழுவதும் கொண்டாட்டம்
இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொண்டாட்டம் வெடித்தது. பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதில், “ஆசியக் கோப்பை இறுதியில் உண்மையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்றது. அதன் விளைவு – இந்தியா வெற்றி பெற்றது. வீரர்களுக்கு என் பாராட்டுக்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.